பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பயிர்இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து 13 கிராம விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மழை பெய்யாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். கடன் வாங்கி விவசாயம் மேற்கொண்ட நிலையில் விவசாயம் கைவிட்டதால் கடன் தொகையை திருப்பி செலுத்த பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகையை நம்பி இருந்தனர்.
இவ்வாறு கடந்த 2017-18-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் முழுமையாக விவசாயம் கைவிட்டதால் முழுக்கமுழுக்க பயிர் இழப்பீட்டு தொகையை நம்பியிருந்தனர். இழப்பீட்டு தொகை கிடைக்கும் கடனை திருப்பி செலுத்தி விடலாம் என்று காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் மாவட்டத்தின் பல பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவைச் சேர்ந்த உலையூர், பிரபுக்களுர், இலங்காக்கூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முறையாக பயிர் காப்பீடு செய்தும் இதுவரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டும் இதுவரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 13 கிராம விவசாயிகள் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பயிர்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனியும் தங்களுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்காவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகள் திரண்டு சாலை மறியல், தொடர் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story