சத்துவாச்சாரியில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
சத்துவாச்சாரியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி பகுதி, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு 3, 4 மற்றும் வசந்தம் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சத்துவாச்சாரி பகுதி 3-ல் உள்ள பழைய தனியார் பள்ளி வளாகத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.
இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் “செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவில்லை. அலுவலக கட்டிடம் அமைவதற்கான கட்டுமான பணிகள் நடக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் வந்து இறங்கின.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று செல்போன் கோபுர பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “அரசின் ஆணைப்படி குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது. ஆனால் விதிகளை மீறி இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்தின் அருகே 3 பள்ளிகள் உள்ளன. அங்கு படிக்கும் மாணவர்கள் கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிக்கப்படுவார்கள்.
பொதுமக்களுக்கு தலைவலி, மூளை பாதிப்பு, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
அவர்களிடம் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story