சேலத்தில் வாகன சோதனை: போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 வாலிபர்கள் கைது
சேலத்தில் வாகன சோதனையின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அதில் இருவரும் சேலம் ஜாகீர் அம்மாபாளையம், கோவில் தெரு பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 23), மணி (27) என்று தெரிந்தது. மேலும் அவர்கள் குடிபோதையில் இருப்பது தெரிந்தது. பின்னர் அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை காண்பிக்குமாறு போலீசார் கேட்டனர்.
அதற்கு இருவரும் சான்றிதழ்கள் தர மறுத்து உள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து உள்ளனர். இது குறித்து சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சரத்குமார், மணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.