அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி ஊடக சான்றளிப்பு-கண்காணிப்புக்குழுவின் பணிகளை செலவின பார்வையாளர் ஆய்வு


அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி ஊடக சான்றளிப்பு-கண்காணிப்புக்குழுவின் பணிகளை செலவின பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2019 4:30 AM IST (Updated: 3 May 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் பணிகளை செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார்.

கரூர், 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தலுக்காக தனியாக ஒரு வங்கி கணக்கு தொடங்கி அதில் ஒரு குறிப்பிட்ட தொகை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரிகை-தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களும் வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவின பார்வையாளராக பதானே சச்சின் குளாப்ரோவை இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த செலவின பார்வையாளரை தமிழ்நாடு காகித ஆலை விருந்தினர் மாளிகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது தேர்தல் செலவினங்கள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின், பொதுமக்கள் 89251-09151 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என செலவின பார்வையாளர் தெரிவித்து உள்ளார்.

மேலும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் பணிகளையும், கட்டுப்பாட்டு அறையின் பணிகளையும் செலவின பார்வையாளர் நேற்று ஆய்வு செய்தார். அங்கு தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ளூர் கேபிள் டி.வி. சேனல்கள் மற்றும் இதர சேனல்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் உரிய அனுமதிபெற்று வெளியிடப்படுகின்றதா? என்று கண்காணிப்படுவதை பார்வையிட்டார்.

இந்தக்குழுவின் மூலம் கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் கேபிள் டி.வி. சேனல்கள் மற்றும் இதர சேனல்களும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும். கேபிள் டி.வி. சேனல்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய விரும்பினால் முன்னதாகவே ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவில் அந்த வீடியோவை அளித்து ஒப்புதல் பெற வேண்டும்.

அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக்கணக்கில் விளம்பரத்திற்கான செலவு சேர்க்கப்படும் என்ற விவரங்கள் பற்றி செலவின பார்வையாளரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story