ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது - போலீசார் விசாரணை
கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
துடியலூர்,
கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையர்பாளையத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் 3 பேர் இந்த மையத்துக்குள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளை அடிக்க முயன்றனர். அப்போது அதில் இருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இரும்பு கம்பியை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் அலாரம் சத்தம் நின்றவுடன் மீண்டும் வந்து கம்பியை எடுத்து உடைக்க முயன்றனர். அலாரம் சத்தம் தொடர்ச்சியாக கேட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த 3 பேர் பொதுமக்களை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றது இடையர்பாளையத்தை சேர்ந்த பாலாஜி (வயது 25), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் (24), ரங்கராஜ் (31) என்பதும், இவர்கள் அனைவரும் ஆட்டோ டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் ஏ.டி.எம். மையம் அருகில் அமர்ந்து மது குடித்து உள்ளனர். போதை தலைக்கேறியதால் பாதை மாறிய அவர்கள் தங்களது பணத்தேவைக்காக ஏ.டி.எம். எந்திரத்தில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும், அதை கொள்ளையடித்தால் வாழ்க்கையில் பணப்பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று முடிவு செய்து உள்ளனர். இதனால் இரும்புக்கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story