தனியார் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
தனியார் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர் ஒருவரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். வாகனங்களில் மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். வாகனங்களை அதிக வேகத்தில் ஓட்டக் கூடாது. அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு அதை கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.
மகளிர் சுகாதார வளாகங்களில் எப்பொழுதும் பெண் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். பள்ளி கட்டிடங்கள் தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுக்கு மேல் கட்ட கூடாது. பள்ளி வசதிக்கேற்ப மாணவர்களை சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்க்க கூடாது. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நலச்சட்டம் (போக்சோ சட்டம்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், அப்துல்சர்தார், கல்வி ஆய்வாளர்கள் ஜெயராமன், சுதாகர் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், கிருஷ்ணகிரி, மத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மெட்ரிக் தனியார் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நடராசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story