கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது


கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 4 May 2019 3:45 AM IST (Updated: 4 May 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் பெத்தேல் விடுதி பின்புறம் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் காலையில் 15 வயது மதிக்கத்தக்க மாணவர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் விளையாட்டு சீருடை அணிந்து இருந்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் கோவில்பட்டி இனாம் மணியாச்சி புது காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் விக்னேஷ் (வயது 15) என்பது தெரிய வந்தது. இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் விக்னேஷ் 354 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். பின்னர் அவர் பிளஸ்-1 வகுப்பில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர விரும்பினார். ஆனால் அவர் மதிப்பெண்கள் குறைவாக பெற்று இருந்ததால், அந்த பாடப்பிரிவு கிடைக்கவில்லை. இதனால் விக்னேஷ் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

கடந்த 1-ந் தேதி இரவில் விக்னேஷ் தனது வீட்டின் மாடியில் தூங்க சென்றார். பின்னர் அவர் அதிகாலையில் மாயமானார். எனவே விக்னேஷ் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால், ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா? அல்லது அதிகாலையில் நடைப்பயிற்சி சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story