பெரம்பலூரில், பாலியல் புகார் கூறப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்டவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை பேசவைத்தது அம்பலம்


பெரம்பலூரில், பாலியல் புகார் கூறப்பட்ட விவகாரம்: பாதிக்கப்பட்டவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை பேசவைத்தது அம்பலம்
x
தினத்தந்தி 3 May 2019 11:15 PM GMT (Updated: 3 May 2019 8:13 PM GMT)

பெரம்பலூரில் பாலியல் புகார் குறித்த ஆடியோ வெளியான விவகாரத்தில் கைதான வக்கீல் அலுவலக பெண் உதவியாளரிடம் விசாரித்தபோது, வேறொரு பெண்ணை பேசவைத்து ஆடியோ வெளியிடப்பட்டது அம்பலமாகி உள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்கள் பலரை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர் போலி பத்திரிகையாளர் ஒருவர் உதவியுடன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள் கடந்த மாதம் 21-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வக்கீல் அருள் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மேற்கண்ட புகார் தொடர்பாக தன்னுடன் செல்போனில் பேசியதாக கூறி ஒரு ஆடியோவினை வெளியிட்டார்.

அ.தி.மு.க. பிரமுகர் பற்றி எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இன்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டு, தவறான செய்தியை பரப்பி வரும் வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட வக்கீல்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் கடந்த 30-ந் தேதி வக்கீல் அருளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதற்கிடையே, வக்கீல் அருள் தன்னுடன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செல்போனில் பேசியதாக வெளியிட்ட ஆடியோ, வேறு ஒரு பெண்ணை வைத்து பேசி பதிவு செய்யப்பட்டதா? என்ற சந்தேகத்தின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வக்கீல் அருள் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த பெரம்பலூர் மாவட்டம், கல்லம்புதூரை சேர்ந்த கோவிந்தசாமி மகள் கலையரசியை (வயது 24) கடந்த 1-ந் தேதி நள்ளிரவில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

வக்கீல் ஆடியோ வெளியிட்டதற்கு உடந்தையாக இருந்ததாக கலையரசியை தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 65-ன் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவியல் நடுவர் நீதிபதி அசோக்பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையின்போது, அவர் தெரிவித்ததாக போலீசார் கூறியதாவது:-

வக்கீல் அருளுக்கு உதவியாளராக பணிபுரியும் கலையரசி தனக்கு தெரிந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு, வக்கீல் அருளிடம் மேற்கண்ட பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் பேசுவதுபோல் பேசுமாறு கூறியுள்ளார். அந்த பெண்ணும் பாதிக்கப்பட்ட பெண் பேசுவது போல் பேசியுள்ளார். தற்போது அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Next Story