நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்: ராஜ்தாக்கரே பொதுக்கூட்ட செலவை தாக்கல் செய்ய வேண்டும் தேர்தல் கமிஷன் உத்தரவு


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம்: ராஜ்தாக்கரே பொதுக்கூட்ட செலவை தாக்கல் செய்ய வேண்டும் தேர்தல் கமிஷன் உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2019 5:50 AM IST (Updated: 4 May 2019 5:50 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலின் போது ராஜ்தாக்கரே பிரசார பொதுக்கூட்டங்களுக்கு ஆன செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நவநிர்மாண் சேனா கட்சிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் 4 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி போட்டியிடவில்லை. ஆனால் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மாநிலம் முழுவதும் தேர்தல் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களை கடந்த மாதம் நடத்தினார். அப்போது, மத்திய, மாநில பாஜனதா அரசுகளை கடுமையாக தாக்கிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு யாரும் ஓட்டளிக்கக்கூடாது என பிரசாரம் செய்தார்.

மேலும் அவர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு ஆதரவாக பேசினார்.

ராஜ்தாக்கரேயின் இந்த பிரசாரம் குறித்து பாஜனதா கட்சி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராஜ்தாக்கரே நடத்திய பொதுக்கூட்டங்களுக்கு ஆன செலவு எந்த வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று கேட்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ராஜ்தாக்கரே நடத்திய பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஆன செலவு கணக்கை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு நவநிர்மாண் சேனாவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேர்தல் கமிஷன் விதிகளின் படி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களுக்கு ஆன செலவினங்களை அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும். அதன்படி நவநிர்மாண் சேனா கட்சியும் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

Next Story