கீழ்பென்னாத்தூர் அருகே பல்லவர் காலத்து நடுகல் கண்டெடுப்பு


கீழ்பென்னாத்தூர் அருகே பல்லவர் காலத்து நடுகல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 5 May 2019 4:45 AM IST (Updated: 4 May 2019 9:22 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுகல் பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

திருவண்ணாமலை,

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் நடுகல் ஒன்று புதைந்து கிடந்தது. இது குறித்து அறிந்ததும் தொல்லியல் ஆய்வாளர் சுதாகர் மூலம் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாஷ், செயலாளர் பாலமுருகன், சுதாகர் ஆகியோர் குழுவாக அங்கு சென்றனர். அவர்கள் பாதியளவில் புதைந்து கிடந்த நடுகல்லினை தோண்டி எடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நடுகல் குறித்து செயலாளர் பாலமுருகன் கூறுகையில், “இந்த நடுகல் போரில் சண்டையிட்டு இறந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கல்லாக இருக்கலாம். நடுகல்லில் உள்ள உருவத்தில் இடது கையில் வில்லும், வலது கையில் குறுகுத்து வாளும், இடையில் சிறிய குத்து வாளும் உள்ளது.

வலது கால் நீட்டப்பட்ட நிலையிலும், இடதுகால் மடங்கிய நிலையிலும் போர் களத்தில் போரிட செல்வது போல் உருவம் அமைந்துள்ளது. வீரனின் வலது புறம் 2 வரியில் வட்டெழுத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் சிதைந்த நிலையில் உள்ளது. மேல் விவரங்கள் அறிய முடியவில்லை.

மேலும் இந்த நடுகல், போர் அல்லது பூசலில் மாண்ட வீரன் அல்லது குறுநில மன்னனுக்கு அப்போது வாழ்ந்த பொதுமக்கள் நடுகல் எடுத்திருக்க வேண்டும். இந்த நடுகல்லின் எழுத்தையும், உருவத்தின் அமைப்பை கொண்டு காலத்தை கணக்கிட்டால் இது கி.பி. 6 அல்லது 7-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல்லாகும். அந்த காலத்தில் பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்ததால் இது பல்லவர் காலத்தைய நடுகல்லாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

நடுகல்லி இருந்த இடத்தை பொதுமக்கள் சீர் செய்து பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த ஊர் மக்கள் இதனை ஒண்டி அய்யனாரப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்”என்றார்.

ஆய்வின்போது வருவாய் ஆய்வாளர் லட்சுமணபெருமாள், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், ராஜேந்திரன், கிராம உதவியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story