அக்னி நட்சத்திரத்தையொட்டி அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம் தொடங்கியது
அக்னிநட்சத்திரத்தையொட்டி திருவண்ணாமலை கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம் தொடங்கியுள்ளது. வருகிற 29-ந் தேதி வரை தாராபிஷேகம் நடக்கிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. அதன் காரணமாக அனலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் பதிவாகி உள்ளது. வெயிலின் தாக்கத்தை தணிக்க கோடை மழையும் வரவில்லை. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் உள்ளதால் கத்தரி வெயில் அதுவரை நீடிக்கும்.
இந்த காலங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும். உலகை காக்கும் பகவானை குளிர்ச்சிப்படுத்துவதற்காக இந்த காலங்களில் சிவாலயங்களில் தாராபிஷேகம் எனப்படும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முதல் தாராபிஷேகம் தொடங்கியுள்ளது.
இதையொட்டி அருணாசலேஸ்வரர் சன்னதி கருவறையில் கூம்பு வடிவிலான தாராபாத்திரம் பொருத்தப்பட்டது. பாத்திரத்தில் ஏலக்காய், ஜாதிக்காய், சந்தனம், வெட்டிவேர், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் நிரம்பிய நீர் நிரப்பப்பட்டு அருணாசலேஸ்வரர் சிரசில் (தலையில்) துளித்துளியாய் விழச்செய்யப்பட்டது. தாராபிஷேகத்தையொட்டி அருணாசலேஸ்வரருக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படவில்லை. அதேபோல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் உள்பட அஷ்டலிங்கங்கள் அனைத்துக்கும் தாராபிஷேகம் நடந்தது.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவாறு செல்கின்றனர். வருகிற 29-ந் தேதி வரை தாராபிஷேகம் நடக்கிறது.
Related Tags :
Next Story