வேலூரில் நள்ளிரவில் பெயிண்டர் சரமாரியாக வெட்டிக்கொலை பழிக்கு பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
வேலூரில் பெயிண்டர் ஒருவர் நள்ளிரவில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை பழிக்கு பழிவாங்குவதற்காக கும்பல் வெட்டிக்கொன்றதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் கோவில் தெருவை சேர்ந்தவர் சையது அபீஸ். இவருடைய மகன் ரசூல் (வயது 25), பெயிண்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணி அளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவரை அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து உள்பட உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரசூல் சுருண்டு விழுந்தார்.
சத்தம் கேட்டு அந்தப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். உடனடியாக மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
ரசூல் வீட்டின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்ததால் தகவல் அறிந்த அவரது தந்தை சையது அபீஸ் அங்கு ஓடி வந்து மகனை மீட்டு ஆட்டோ மூலம் வேலூர் பென்ட்லேன்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராணி மற்றும் போலீசார் மருத்துவமனைக்கும், சம்பவ இடத்துக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ரசூல் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 1 மணி அளவில் ரசூல் இறந்தார்.
இதனையடுத்து வேலூர் தெற்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். முதல் கட்ட விசாரணையில், வேலூரை சேர்ந்த ஒரு ரவுடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அந்த ரவுடியை கொலை செய்த கும்பலை சேர்ந்த ஒருவருடன் ரசூலுக்கு நட்பு இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த ரவுடியின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க ரவுடியின் சகோதரன் காத்திருந்தான். இந்தநிலையில் அந்த ரவுடியின் கொலையில் தொடர்புடைய ரசூலின் நண்பர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது ரசூல் தான் அடக்கத்துக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிகிறது.
ரவுடியின் சகோதரன் பழிக்கு பழியாக ரசூலை கொலை செய்ய திட்டம் தீட்டி இக்கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படையை சேர்ந்த சில போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய சென்னை விரைந்துள்ளனர்.
கொலை செய்தவர்கள் பிடிபட்டால் தான் கொலைக்கான உண்மையளளளளளள காரணம் தெரியவரும் என்றும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story