டாஸ்மாக் கடை மீது பீர்பாட்டில் வீசி மாமூல் கேட்ட ரவுடி கைது


டாஸ்மாக் கடை மீது பீர்பாட்டில் வீசி மாமூல் கேட்ட ரவுடி கைது
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 4 May 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடை மீது பீர் பாட்டில் வீசி, மாமூல் கேட்ட ரவுடி கைது செய்யப்பட்டார்.

வேலூர், 

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் மாலை ரவுடி ஒருவர் அவரது கூட்டாளிகளுடன் சென்று மாமூல் மற்றும் மது கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் பணம் மற்றும் மது கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ரவுடி, பீர் பாட்டிலை எடுத்து கடையின் மீது வீசி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதை கண்டிக்கும் விதமாகவும், தினமும் மாமூல் கேட்டு மிரட்டி வரும் ரவுடியை கைது செய்ய வேண்டும் என்று கூறியும் வேலூரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடையை, அதன் ஊழியர்கள் திடீரென பூட்டினர். இதனால் மது வாங்க வந்த மது பிரியர்கள் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசிலும், டாஸ்மாக் மேலாளரிடமும் ஊழியர்கள் புகார் செய்தனர். இதையடுத்து அந்த ரவுடியை கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் திருமால் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில் டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு மிரட்டியது அதேபகுதியை சோர்ந்த அய்யப்பன் (வயது 31) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் இரவு முழுவதும் தேடி வந்தனர். இந்த நிலையில் வேலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த ரவுடி அய்யப்பனை இன்ஸ்பெக்டர் திருமால் நேற்று காலை கைது செய்தார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “அய்யப்பன் மீது பல குற்ற வழக்குகள் உள்ளது. அவர் மீது பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். மேலும் அவரது கூட்டாளிகளையும் தேடி வருகிறோம்” என்றனர்.

Next Story