மாவட்டத்தில் 17 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு 16,669 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


மாவட்டத்தில் 17 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு 16,669 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 5 May 2019 4:45 AM IST (Updated: 4 May 2019 9:46 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 17 மையங்களில் இன்று ‘நீட்’ தேர்வு நடக்கிறது. 16 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

சேலம், 

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‘நீட்‘ தேர்வு நடக்கிறது. பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேர முடியும்.

சேலம் மாவட்டத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் 39 ஆயிரத்து 222 பேர் தேர்வு எழுதினர். இதில் 35 ஆயிரத்து 549 பேர் வெற்றி பெற்றனர். இதனிடையே மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்தது.

நீட் தேர்வு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் தேர்வு எழுத மாவட்டத்தில் 17 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு 16 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

சேலம் சின்னதிருப்பதியில் உள்ள ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, சோனா கல்லூரி உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகளில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு மையங்களில் மாணவர்களின் வரிசை எண்களை ஆசிரிய, ஆசிரியைகள் ஒட்டினர். மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தேர்வு எழுதும் மாணவிகள் வளையல், கம்மல், கொலுசு, மூக்குத்தி, செயின், துப்பட்டா உள்ளிட்டவைகளை அணிந்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ‘ஷூ‘ அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்குள் கைக்கெடிகாரம், குடிநீர் பாட்டில்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்திய பிறகே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story