சூளகிரியில் நடுரோட்டில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது கல்லூரி மாணவர் உயிர் தப்பினார்
சூளகிரியில் நடுரோட்டில் மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது. இதில் கல்லூரி மாணவர் உயிர் தப்பினார்.
சூளகிரி,
டெல்லியை சேர்ந்தவர் அமித் சாகு (வயது 20). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர், புதுச்சேரியில் உள்ள தனது பேராசிரியரை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி -அலகுபாவி பிரிவுப்பாதை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
அப்போது, மோட்டார் சைக்கிளின் பின்புறம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அந்த வழியாக காரில் சென்ற சிலர் அமித் சாகுவிற்கு தெரிவித்தனர். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில், அந்த மாணவர் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து உயிர் தப்பினார். நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த அவரது வாகனத்தின் அனைத்து பகுதிகளிலும் தீ பரவியது.
இந்தநிலையில், அந்த வழியாக தண்ணீர் ஏற்றி சென்ற ஒரு டிராக்டரை நிறுத்தி, அதிலிருந்த தண்ணீரை மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அமித் சாகு, இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story