மாவட்டத்தில் தரமான காய்கறி, பழங்களை விற்பனை செய்யுங்கள் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்


மாவட்டத்தில் தரமான காய்கறி, பழங்களை விற்பனை செய்யுங்கள் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 May 2019 3:45 AM IST (Updated: 4 May 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமான காய்கறி, பழங்களை விற்பனை செய்யுமாறு கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம், சப்போட்டா உள்ளிட்ட பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப்பொருட் களை தெளித்தோ (எத்திப்பான், எத்தலின்) பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம்.

கால்சியம் கார்பைடு கற்களையோ அல்லது செயற்கை வேதிப்பொருட்களை தெளித்தோ பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உணவு பாதை அஜீரண உபாதைகளும், கடுமையான தலைவலி, மயக்கம், வாந்தி, வயிற்று போக்கு, தலைசுற்றல் போன்றவை ஏற்படும். மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில் மேற்கொண்ட ஆய்வில் கால்சியம் கார்பைடு கற்கள் மற்றும் செயற்கை வேதிப்பொருட் களை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் கண்டறிந்து பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அறிவுறுத்தியதுக்கு பிறகும் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த நபர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம். உணவு பாதுகாப்பு சட்டத்தில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வோர் அனைவரும் இந்த சட்டத்தினை முழுமையாக கடைபிடித்து, தங்களது உணவு வணிகத்தினை பதிவு அல்லது உரிமம் பெற்று நுகர்வோர் அனைவருக்கும் பாதுகாப்பான, தரமான காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story