தமிழகத்தை புதிய திசை நோக்கி திருப்புங்கள்: “ஓட்டுக்கு பணம் வாங்கி ஏமாற வேண்டாம்” புதுக்கோட்டையில் கமல்ஹாசன் பிரசாரம்
“ஓட்டுக்காக உங்களுக்கு கொடுக்கப்படும் பணம் உங்களிடம் இருந்து களவாடியதுதான். அதை வாங்கி ஏமாற வேண்டாம். தமிழகத்தை புதிய திசை நோக்கி திருப்புங்கள்” என்று புதுக்கோட்டையில் நடந்த பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தியை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மாலையில் புதுக்கோட்டை பஜார் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் திறந்த வேனில் நின்றபடி, அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
இங்கு தற்போது தவறான சுழற்சி உள்ளது. சக்கரத்தை சரியான பாதைக்கு திருப்பி சுழற்ற மக்களாகிய நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். பல கட்சிகள் ஓட்டுக்காக உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்த பணம் அவர்களின் பணம் அல்ல. அதை வாங்கி ஏமாற வேண்டாம் என்பது தான் எங்களின் முதல் அறிவுரை. ஓட்டுக்கு பணம் வாங்குவது நம் தலையில் நாமே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆகும்.
ஆனால், தற்போது அதற்கு கூட இல்லாமல் மண்ணை வாரி எடுத்து விட்டனர். மீண்டும் இங்குள்ள நீர்நிலைகளை சரிசெய்ய வேண்டும் என்றால் நேர்மையான ஒருவனுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை நான் உணர்வேன். 3 அடி தோண்ட உரிமை வாங்கிக்கொண்டு 20 அடி தோண்டினால் எப்படி? தாய் தான் அந்த பூமி என்றாலும் அதற்கும் ஒரு அளவு இருக்கிறது. தாயின் உயிரையே எடுத்து விடக்கூடாது. அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களின் வியாபாரம் தான் முக்கியம்.
அவர்கள் விளையாட வேண்டும் என்பதற்காக தான் உங்களை தேடி வருகிறார்கள். அதற்காக உங்களை காயாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் நகர்த்தும்போது நீங்கள் நகராமல் போய் விடுவீர்களோ என்பதற்காக உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். அந்த காசு அவர்களுடையது அல்ல. உங்களிடம் இருந்து களவாடியது.
குடம் தண்ணீருக்கு ரூ.10 கொடுக்க வேண்டிய அளவுக்கு உங்களை கொண்டு வந்து விட்டார்கள். அது ரூ.15 ஆகும் வரை நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்க போகிறீர்களா? நாங்கள் குடத்துக்கு ரூ.1 கொடுக்கிறோம் என்று சொல்லவில்லை. குடம் உங்களுடையது. தண்ணீர் உங்களுடையது. அது உங்களை வந்தடைய வேண்டும். அதற்கான வேலையை நாங்கள் செய்வோம். அதற்கான ஆரம்பமாக நீங்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இளைய தலைமுறையினர் ஓட்டு போடுவது மட்டும் அல்லாமல் உங்கள் வீட்டு பெரியவர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். தைரியமாக பேசுங் கள், மக்கள் நீதி மய்யத்துக் காக. அப்படி செய்தால் நாளை நமதே. தமிழகத்தை புதிய திசை நோக்கி திருப்புங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கமல்ஹாசன் அந்தோணியார்புரம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தலைமை அலுவலக பார்வையாளர்கள் தங்கவேலு, எபினேசர், குருவையா, பிரபு, தொகுதி பொறுப்பாளர்கள் ரமேஷ், ரத்தினராஜா, அக்பர், ஜவகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story