இந்தியாவில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி பழங்கள், காய்கறிகள் வீணாகிறது


இந்தியாவில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி பழங்கள், காய்கறிகள் வீணாகிறது
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில், ஆண்டுக்கு ரூ.2½ லட்சம் கோடி பழங்கள், காய்கறிகள் வீணாகிறது என்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு இயக்குனர் அனந்தராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன தலைவர் திலீப் என்.குல்கர்னி கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் கலந்து கொண்டு 53 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியாவில் 1960-ம் ஆண்டுகளில் பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு உணவு, தானியங்கள் மற்றும் பழங்களின் உற்பத்தி அதிகரித்தது. இதன் மூலம் 2017-18-ம் ஆண்டுகளில் நம் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 283 மில்லியன் டன்னையும், பழங்கள், காய்கறிகளின் உற்பத்தி 300 மில்லியன் டன்னையும் எட்டியது. என்றாலும் அறுவடை பின் சார்ந்த தொழில்நுட்பங்களில் ஏற்படக்கூடிய இழப்புகள் காரணமாக தனிநபர் இருப்பு விகிதத்தில் 20 முதல் 25 சதவீதம் குறைவாக இருக்கிறது.

இதனால் ஆண்டுக்கு ரூ.2.40 லட்சம் கோடி பழங்கள், காய்கறிகள் வீணாகிறது. எனவே இந்த இழப்பை குறைக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் சிறந்த பதப்படுத்துதல் முறை தேவைப்படுகிறது. பண்ணை சார்ந்த வருவாயை பெருக்கும் விதமாக இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம் உணவு பதப்படுத்துதலில் பல்வேறு வகைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் முழக்கப்படி உணவு பதப்படுத்தல் மூலம் விவசாயிகளின் வருவாயை எளிதாக இரட்டிப்பாக்க முடியும். நம் நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதன் பங்களிப்பு மொத்த ஏற்றுமதியில் 13 சதவீதமாகவும், தொழிலக முதலீட்டில் 6 சதவீதமாகவும் உள்ளது. நம் நாட்டில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றாக உணவு பதப்படுத்துதல் தொழில் விளங்குகிறது. உற்பத்தி, நுகர்வு ஏற்றுமதியில் 5-ம் இடத்தில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி சந்தையில் பதப்படுத்தப்பட்ட உணவு வளர்ச்சி விகிதம் 12 சதவீதத்தை எட்டி உள்ளது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 75 சதவீத வேளாண்மை பொருட்களில் 28 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவாக இருக்கிறது. இது உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புகள் பரவலாக இருப்பதை காட்டுகிறது. இந்த வாய்ப்புகளை பட்டம் பெற்ற உணவு தொழில்நுட்பவியலாளர்கள், பொறியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தொழில்முனைவோருக்கு தேவையான நிதி உள்ளிட்ட உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. எனவே வேலைவாய்ப்புக்காக வேலை தேடுவதை விட வேலை வழங்குபவர்களாக மாணவர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story