திருக்குறுங்குடி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
சீராக குடிநீர் வழங்கக்கோரி திருக்குறுங்குடி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
ஏர்வாடி,
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நகரப்பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து, அதில் நீரேற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று திருக்குறுங்குடி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story