12-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி 2 பேரை காப்பாற்றி உயிரை விட்ட பரிதாபம்


12-ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி பலி 2 பேரை காப்பாற்றி உயிரை விட்ட பரிதாபம்
x
தினத்தந்தி 5 May 2019 3:30 AM IST (Updated: 5 May 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

2 பேரை காப்பாற்றி 12-ம் வகுப்பு மாணவன் விகார் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

மும்பை,

மும்பை பவாய் பகுதியை சேர்ந்தவர் பரியாத் அலி (வயது18). 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ளார். இவர் சம்பவத்தன்று சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே உள்ள விகார் ஏரிக்கு குளிப்பதற்காக நண்பர்கள்சிலருடன் சென்று இருந்தார்.

அப்போது அந்த ஏரியின் உள்ளே தத்தளித்து கொண்டு இருந்த 2 பேர் உதவி கேட்டு சத்தம் போட்டனர். இதைப்பார்த்து பதறிப்போன பரியாத் அலி மற்றும் அவரது நண்பர்கள், அவர்களை காப்பாற்றுவதற்காக ஏரிக்குள் இறங்கினர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த 2 பேரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

ஆனால் 2 பேரை காப்பாற்றிய போது பரியாத் அலி துரதிருஷ்டவசமாக தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய பரியாத் அலியை தேடினர். இந்தநிலையில், சிறிது நேரம் கழித்து மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

2 பேரை காப்பாற்றி மாணவன் உயிரை விட்ட சம்பவம் குறித்து முல்லுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story