ஆண்டிமடம் அருகே காதலன் தூக்குப்போட்டு தற்கொலை மருந்தில்லா ஊசி செலுத்திய பெண்ணுக்கு சிகிச்சை


ஆண்டிமடம் அருகே காதலன் தூக்குப்போட்டு தற்கொலை மருந்தில்லா ஊசி செலுத்திய பெண்ணுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 5 May 2019 4:30 AM IST (Updated: 5 May 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே காதலன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மருந்தில்லாஊசி செலுத் திய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் பிரபு என்ற தெய்வசிகாமணி (வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த உடையார்பாளையம் அருகே உள்ள முனையதிரையன்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கயல்விழி (23) என்ற பெண்ணுடன் தெய்வசிகாமணிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

தெய்வசிகாமணியும், கயல்விழியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் கயல்விழியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனிடையே கயல்விழியை சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உறவினர் விஜய் என்பவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சில வாரம் சென்னையில் அவர்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

அதன்பின் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் கயல்விழி தனது கல்லூரி காதலரான தெய்வசிகாமணியிடம் அடிக்கடி செல்போனில் பேசி தன்னை அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தெய்வசிகாமணி கயல்விழியை தன்னுடன் அழைத்து வந்தார். ஆனால் இந்த விவரம் தெரியாத கயல்விழியின் கணவர் விஜய் தனது மனைவியை காணவில்லை என்று, கயல்விழியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த கயல்விழியின் பெற்றோர் சென்னைக்கு சென்று கயல்விழியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்திலுள்ள பாலத்தின் அருகில் நேற்று தெய்வசிகாமணியும், கயல்விழி பேசிக்கொண்டிருந்ததை அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மருந்தில்லா ஊசியை ஒருவருக்கொருவர் மாறி உடலில் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கயல்விழி மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் ஓடி வந்தனர். இதற்கிடையில் கயல்விழி இறந்து விட்டதாக நினைத்த தெய்வசிகாமணி, உடனடியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று, அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கிரிக்கெட் விளையாடிய வாலிபர்கள் உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அப்போது மருந்தில்லா ஊசி செலுத்தியதில் மயங்கிய நிலையில் கிடந்த கயல்விழியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தெய்வசிகாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக கயல்விழி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஜெயங்கொண்டம் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி வந்து பார்வையிட்டார். அப்போது அங்கு ரத்தத்துடன் கிடந்த மருந்தில்லா ஊசியையும், தெய்வசிகாமணி, கயல்விழியின் காலணிகளையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம்தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசராணை நடத்தி வருகிறார்கள். 

Next Story