ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க. திட்டம்: 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக்கூடாது


ஆட்சியை தக்கவைக்க அ.தி.மு.க. திட்டம்: 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக்கூடாது
x
தினத்தந்தி 4 May 2019 11:00 PM GMT (Updated: 4 May 2019 8:28 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைக்க திட்டமிடுவதால், 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக்கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெரிவித்தார்.

திருச்சி,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, பொருளாளர் அபுதாகீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபாநாயகர் ஏற்கக்கூடாது

சென்னை காமராஜர் அரங்கில் ஜூன் 21-ந் தேதி சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா, கட்சியின் 11-ம் ஆண்டு தொடக்க விழா, பெருநாள் சந்திப்பு என்று முப்பெரும் விழா நடத்த இருக்கிறோம். வருகிற 23-ந் தேதி 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

தேர்தல் முடிவு அரசுக்கு பாதகமாக இருக்கும் என்பதால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக, 3 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய அ.தி.மு.க. கொறடா சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கக்கூடாது.

என்.ஐ.ஏ. மீது குற்றச்சாட்டு

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மனித தன்மைக்கு முற்றிலும் எதிரான இத்தகைய பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் இலங்கை அரசு அப்பாவி மக்களை பிடித்து சென்று துன்புறுத்துவதை கைவிட வேண்டும்.

தேசத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் தீவிரவாத வழக்குகளை விசாரிக்க உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), அப்பாவிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவும், சிறுபான்மை சமூக அமைப்புகளை தேசவிரோத சக்திகளாக சித்தரிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுகிறதோ என்ற சந்தேகத்தை சமீபத்திய செயல்பாடுகள் ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story