காஞ்சீபுரத்தில் அத்திவரதர் விழா இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை


காஞ்சீபுரத்தில் அத்திவரதர் விழா இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் விழா நடைபெறுவதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்குள் இருக்கும் அனந்தசரஸ் குளத்தில் இருந்து, அத்திவரதர் 2.7.1979-ம் ஆண்டு வெளியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுவது ஐதீகம். இதனைத்தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி அன்று அத்திவரதர் வெளியில் எழுந்தருளுகிறார்.

இதில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி அத்திவரதரை வழிபாடு செய்ய அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர், ஆணையர் கே.பணீந்திரரெட்டி, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பக்தர்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், மருத்துவ முகாம், குடிநீர், பொதுகழிவறை அமைத்தல் மற்றும் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்ய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி தனியாக குழு அமைப்பதோ, கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல் என்ற பேரில், நன்கொடை வசூல் செய்வதோ கூடாது எனவும் அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர், வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், செந்தில்குமார், கவிதா, வெள்ளைச்சாமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story