மரம் விழுந்து கிடப்பதால் தடுப்பணையில் நீர்வரத்துக்கு இடையூறு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மரம் விழுந்து கிடப்பதால் தடுப்பணையில் நீர்வரத்துக்கு இடையூறு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 May 2019 4:08 AM IST (Updated: 5 May 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

மரம் விழுந்து கிடப்பதால் தடுப்ணையில் நீர்வரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே உள்ள குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் அன்றாட தேவைக்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் வசதி போதுமானதாக இல்லாமல் இருந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் புதிதாக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த பயன் அடைந்தனர்.

நாளடைவில் அந்த தடுப்பணை புதர்கள் சூழ்ந்தும், மண் நிறைந்தும் பாழடைந்து போனது. இதனால் நீரோட்டத்தின்போது தடுப்பணையில் குறைவாக தண்ணீரையே தேக்கி வைக்க முடிந்தது. எனவே தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தடுப்பணையில் சீரமைப்பு பணி நடைபெற்றது.

இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தடுப்பணை வறண்டு கிடந்தது. தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருவதால், தடுப்பணை நிறைந்து காணப்படுகிறது. ஆனால் தடுப்பணையில் மரம் ஒன்று விழுந்து கிடக்கிறது. காய்ந்து போன நிலையில் கிடக்கும் அந்த மரத்தை அப்புறப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தடுப்பணைக்கு தண்ணீர் வரும் பாதையில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, தடுப்பணை உடையும் அபாயமும் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அந்த மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story