முதுமலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முதுமலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மசினகுடி,
தமிழகத்தில் முதுமலை, ஆனைமலை, முண்டந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த புலிகள் காப்பகங்களில் 100–க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் 75–க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. மேலும் 80–க்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகளும் உள்ளன. புலிகள், சிறுத்தைப்புலிகள் மட்டுமின்றி காட்டுயானைகளின் புகழிடமாகவும் முதுமலை திகழ்ந்து வருகிறது. இதற்கு காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் ஆகிய வனவிலங்குகள் வாழ ஏற்ற காலநிலையும், உணவுகளும் இருப்பதே காரணம் என வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை புலி, சிறுத்தைப்புலிகளை முதுமலையில் காண்பது மிகவும் அரிதாக இருந்து வந்தது. ஒரு மாதத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகளை வனத்துறையினரால் காண முடிந்தது. அவைகளை நேரில் காண முடியாத காரணத்தால் நவீன தானியங்கி கேமராக்களை வனப்பகுதிக்குள் பொருத்தி, அதன் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால் தற்போது அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், ஒரு மாதத்தில் சிறுத்தைப்புலி அல்லது புலியை 20 முறையாவது வனத்துறையினர் நேரில் பார்த்து விடுகின்றனர். காலை அல்லது மாலை நேரங்களில் புதர்களில் இருந்து வெளியே வரும் சிறுத்தைப்புலிகள் மரங்களின் மீது ஏறி அமர்ந்து கொள்கின்றன. மேலும் கூட்டமாக திரியும் மான்களை அவை வேட்டையாடி வருகின்றன.
வனத்துறை வாகனங்களில் சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளும் புலி, சிறுத்தைப்புலி, காட்டுயானைகளை கண்டு ரசித்து வருகின்றனர். குறிப்பாக குட்டிகளுடன் இடம்பெயர்ந்து வந்துள்ள காட்டுயானைகள் ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபடுவதை காண முடிகிறது. முதுமலையில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.