பயிர் காப்பீட்டில் முறைகேடு கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை
பயிர் காப்பீட்டில் முறைகேட்டையொட்டி கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தேவகோட்டை,
விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து இருந்தனர். ஆனால் 2017–18–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடில் சாகுபடி செய்துள்ள நிலங்களைவிட கண்மாய்கள், ஏரி, குளங்கள், கிராவல் குவாரிகள் போன்ற இடங்களை காட்டி கூடுதலாக காப்பீடு செய்யப்பட்டிருந்தது.
அதிகாரிகள் ஆய்வு செய்த போது பயிர் காப்பீடில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் ஆய்வுகளின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து இழப்பீட்டு தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேவகோட்டை வட்டம் நெடோடை வருவாய் கிராமத்தில் உள்ள கணக்குகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த கிராம நிர்வாக அலுவலர் சேகரை தேவகோட்டை கோட்டாட்சியர் ஈஸ்வரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சேகர் இந்த மாதம் 30–ந்தேதி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.