சதுரகிரியில் குடிநீர், உணவு கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு


சதுரகிரியில் குடிநீர், உணவு கிடைக்காமல் பக்தர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 4 May 2019 11:16 PM GMT (Updated: 4 May 2019 11:16 PM GMT)

சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள் குடிநீர், உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது.

வத்திராயிருப்பு,

சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளன. இங்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி காலங்களில் மட்டும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த சமயத்தில் மட்டுமே மலை ஏற வனத்துறை அனுமதி வழங்குகிறது.

இந்த நிலையில் சுமார் 7 கிலோ மீட்டர் மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மருத்துவம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் செய்யவில்லை. ஆனாலும் மலையேறும் பக்தர்கள் பல்வேறு துன்பங்களுக்கு இடையே மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.

சித்திரை அமாவாசையான நேற்று தொடர் விடுமுறை காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். மலை ஏறும் வழியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாததால் தவிப்புக்கு உள்ளானார்கள்.

அன்னதான கூடங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில் தனியார் உணவு விடுதிகளில் ஒரு இட்லி ரூ.20 எனவும் ஒரு தோசை ரூ.100 எனவும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.50–க்கும் விற்கப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

சதுரகிரி மலைப்பகுதியில் மான், மிளா, குரங்கு, கரடி, காட்டுமாடு, யானை ஆகிய வனவிலங்குகள் கடும் வறட்சியின் காரணமாக குடிப்பதற்கு தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மலை ஏறிய பக்தர் ஒருவரிடம் குரங்கு கூட்டம் ஒன்று அவர் கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை சைகை மூலம் கேட்டது, குரங்குகள் தண்ணீர் கேட்பதை புரிந்து கொண்ட பக்தர் தான் கொண்டு வந்திருந்த தண்ணீரை குரங்குகளுக்கு கொடுத்தார். குரங்குகள் தண்ணீரை ஆர்வத்துடன் பருகி தாகத்தை தீர்த்துக் கொண்டன. இந்த சம்பவம் மலைக்கு சென்ற பக்தர்கள் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. உடனடியாக அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குரங்குகளுக்கு கொடுத்தனர்.

அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் வசதி, அன்னதான வசதி உள்ளிட்டவைகளை செய்து தர வேண்டும். குடிநீர் வேண்டி பக்தர்களிடம் கையேந்தும் வனவிலங்குகளின் அவல நிலையை வனத்துறையினர் போக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story