கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகங்களில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை


கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகங்களில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 May 2019 11:20 PM GMT (Updated: 4 May 2019 11:20 PM GMT)

கள்ளிக்குடி மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலங்களில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது மங்கம்மாள்பட்டி. இங்கு வைகை கூட்டுக்குடிநீரும், உள்ளூர் ஆழ்துளை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரும் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக கூட்டுக்குடிநீரும், ஆழ்துளை கிணற்றில் இருந்து வழங்கப்படும் தண்ணீரும் சரிவர வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு, பொதுமக்கள் தவித்து வருகின்றனர். விலை கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் மங்கம்மாள்பட்டி கிராம மக்கள் நேற்று டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு கூடினர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

கள்ளிக்குடியை அடுத்த வில்லூர் கிராமத்தை ஒட்டிய விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலை தொடர்ந்து வருகிறது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வினியோகம் செய்ய வேண்டும் என்று 2 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருவதவாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் எழுப்பினர்.

இதேபோல் நேசநேரி கிராமத்தில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்ததால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் அந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாக இப்பிரச்சினை நீடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தநிலையில் வில்லூரி, நேசநேரி கிராம மக்கள் குடிநீர் கேட்டு நேற்று கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story