டி.கல்லுப்பட்டி அருகே பரிதாபம்: நுங்கு வெட்ட பனையில் ஏறியவர் தவறி விழுந்து சாவு


டி.கல்லுப்பட்டி அருகே பரிதாபம்: நுங்கு வெட்ட பனையில் ஏறியவர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 5 May 2019 4:59 AM IST (Updated: 5 May 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி அருகே நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய கொத்தனார் ஒருவர், தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து பரிதாபமாக இறந்துபோனார்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே என்.முத்துலிங்காபுரத்தில் உள்ள இந்திராகாலனியை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகன் முத்துக்கண்ணன் (வயது 23). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று முத்துக்கண்ணன் தனது நண்பர்களுடன் ஏ.பாறைப்பட்டி பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு தோட்டத்தில் பனை மரங்கள் இருந்ததை பார்த்துள்ளனர். இதனால் நண்பர்கள் பனை மரத்தில் நுங்கு வெட்ட முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மரத்தில் ஏறி நுங்கு வெட்டினர்.

இதேபோன்று முத்துக்கண்ணனும் நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது அவர் கால் இடறி பனை மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்த நண்பர்கள் முத்துக்கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்கண்ணன் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story