தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்; திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்; திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 5 May 2019 5:00 AM IST (Updated: 5 May 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தனக்கன்குளத்தில் பிரசாரத்தை தொடங்கி வேடர் புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி வழியாக இரவு நாகமலைபுதுக்கோட்டையில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அவருக்கு பல்வேறு இடங்களில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் இருக்கும் மோடி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற வகையில் மக்களாகிய நீங்கள் ஆதரவு அளித்துள்ளர்கள். அதேபோல் ஆதரவை தந்து, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும் என்ற வகையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் தேர்தலுக்காக வந்து செல்பவர்கள் அல்ல. எந்த சூழ் நிலையிலும் உங்களோடு இருந்து பணியாற்றக் கூடியவர்கள். எனவே அந்த உரிமையோடு உணர்வோடு உங்களிடத்தில் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு வந்துள்ளோம்.

இந்த தனக்கன்குளம் பகுதியில், நாடக மேடையில் பகுதியில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் அந்த சாலை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். அதேபோல் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டு இருந்த பொது கழிப்பறையை அரசியல் காரணத்திற்காக இப்போது உள்ள அரசு அடைத்து வைத்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். குடிநீரும் இந்த பகுதியில் முறையாக வழங்கு வதில்லை.

நான்கு வழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அந்த பகுதியில் உடனடியாக சுரங்கப்பாதை அமைக்கப்படும். தனக்கன் குளம் கண்மாய் தூர்வாரப்படும். இந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. ஆனால் இங்கு கால்நடை ஆஸ்பத்திரி இல்லாதது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. எனவே இங்கு கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தரப்படும். இங்குள்ள உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்.

இப்படி பல உறுதி மொழிகளை உங்களிடம் கூறியிருந்தாலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு உறுதி மொழிகளை அறிவித்துள்ளோம். அதில் குறிப்பாக விவசாயிகளின் கடன் மற்றும் கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வேலைவாய்ப்பு, குடிநீர் பிரச்சினை என என்னென்ன தேவை இருக்கிறதோ அதனை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்பு இருந்தால் தான் நிவர்த்தி செய்ய முடியும். இந்த ஆட்சியில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலையும் நடத்தவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வருகிற 19-ந் தேதி நடைபெறும் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் நடந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். அவர்களது நீண்ட நாள் கோரிக்கையான தனி வருவாய் பிர்கா உருவாக்கி தரப்படும். அடிப்படை வசதிகள் செய்து நிறைவேற்றப்படும். கீழக்குயில்குடி, மேலகுயில்குடி பகுதிகளுக்கு பஸ் வசதி செய்து தரப்படும். இவை அனைத்தும் சரவணன் எம்.எல்.ஏ.யாக பதவி ஏற்ற உடன் உறுதியாக நிறைவேற்றி தரப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

முன்னதாக பிரசாரத்தின் போது கருணாநிதி, செந்தமிழ் என்று 2 குழந்தைகளுக்கு ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

Related Tags :
Next Story