ஆம்பூரில் ரெயிலில் அடிபட்டு அக்காள்–தம்பி உள்பட 3 பேர் பலி பிளாட்பாரத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்தபோது பயங்கரம்
ஆம்பூர் ரெயில்நிலையத்தில் பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடந்த 3 பேர் மின்னல் வேகத்தில் சென்ற ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்கள்.
ஆம்பூர்,
இந்த சோகமான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு பெங்களூரு, சேலம், சென்னை மார்க்கத்தில் தினமும் செல்லும் ஒரு சில சூப்பர்பாஸ்ட் ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. மேலும் வாராந்திர ரெயில்களிலும் குறிப்பிட்ட ரெயில்கள் மட்டுமே நிற்கும். மற்ற ரெயில்கள் இந்த ரெயில் நிலையத்தில் நிற்காமல் மின்னல் வேகத்தில் செல்லும்.
4 பிளாட்பாரங்கள் இந்த ரெயில் நிலையத்தில் இருந்தாலும் முதல் பிளாட்பாரத்தில் எந்த ரெயிலும் நிற்பதில்லை. இதனால் டிக்கெட் எடுக்கும் பயணிகள் பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தை கடந்து 2–வது பிளாட்பாரத்திற்கு செல்கின்றனர். நடைமேடைபாலம் ஒரு முனையில் இருப்பதால் அங்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால் பெரும்பாலானோர் தண்டவாளத்தில் இறங்கி ஆபத்தான முறையில்தான் கடக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் எத்தனையோ உயிரிழப்புகளும் ஏற்பட்டு விட்டன.
இந்த நிலையில் ஆம்பூர் அருகே உள்ள கரும்பூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது சகோதரர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக சங்கர் மற்றும் அவரது அக்காள் பானுமதி (50), பானுமதியின் பேரன் நித்தீஷ் (11) ஆகிய 3 பேரும் சென்னை செல்ல முடிவு செய்தனர். இதற்காக நேற்று அதிகாலை 4½ மணியளவில் அவர்கள் ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
பின்னர் டிக்கெட் எடுத்து விட்டு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறுவதற்காக முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி 2–வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் ஆம்பூரில் நிற்காமல் மின்னல் வேகத்தில் செல்லும். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில் கடந்து சென்று விடும். இந்த நிலையில் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த 3 பேரும் அதிவேகத்தில் சென்ற அந்த ரெயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டனர். அவர்களது உடல் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு துண்டுதுண்டாகி சிதறியவாறு பரவிக்கிடந்தன.
அப்போது அந்த ரெயிலுக்கு சிக்னல் காட்டிவிட்டு சென்ற அதிகாரிகளும் இதனை சரிவர கவனிக்கவில்லை. இந்த நிலையில் பணியாளர்கள் பார்த்து அதிகாரிக்கு தெரிவிக்கவே அவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களது உடல்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்தது. அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே காலை 8 மணியாகிவிட்டது. 3 மணி நேரத்திற்கு பிறகு போலீசார் 3 பேரின் உடல்பாகங்களை கோணிப்பையில் போட்டு சேகரித்து பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகாலையிலேயே 3 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளாட்பாரத்தில் இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்த பலர் உயிரிழந்து விட்டனர். ஆனால் உயிரிழப்புகளை தடுக்க ரெயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே 2–வது பிளாட்பாரத்துக்கு செல்பவர்கள் வசதிக்காக டிக்கெட் கவுண்ட்டர் உள்ள பகுதியின் அருகிலேயே நடைமேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என ஆம்பூரை சேர்ந்த பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.