சேலம் அருகே என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை தொடங்கியது
சேலம் அருகே என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே காட்டூரை சேர்ந்தவர் முறுக்கு வியாபாரி கணேசன் (வயது 31). இவரை பிரபல ரவுடிகள் ஆனந்தன், கதிர்வேல் உள்பட பலர் சேர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி கொலை செய்தனர். இது குறித்து காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில், கடந்த 2-ந் தேதி குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி கதிர்வேலை பிடிக்க சென்ற காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரி ஆகியோரை அவர் கத்தியால் வெட்டினார். அப்போது, தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தனது துப்பாக்கியால் சுட்டதில் மார்பில் குண்டு பாய்ந்து ரவுடி கதிர்வேல் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், என்கவுண்ட்டர் குறித்து சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணபவன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, கதிர்வேலின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதுதவிர, ரவுடியை துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரி, பெரியசாமி, ஏட்டு ராஜாமணி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, ரவுடி கதிர்வேல் என்கவுண்ட்டர் சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். அதில், கணேசன் கொலை வழக்கில் ரவுடி தேடப்படுவது குறித்தும், அவரை பிடிக்க முயன்றபோது, நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும், தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் ரவுடி கதிர்வேலை என்கவுண்ட்டர் செய்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் உடன் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அண்ணாமலை ஆகியோரிடம் தனித்தனியாக ஆணையத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதுதவிர ரவுடியின் பெற்றோர், உறவினர்களிடமும் தேசிய மனித உரிமை ஆணையத்தினர் விசாரிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story