மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் ‘நீட்’ தேர்வு 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்


மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் ‘நீட்’ தேர்வு 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 5 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-05T22:07:00+05:30)

நாமக்கல் மாவட்டத்தில் 9 மையங்களில் ‘நீட்’ தேர்வை சுமார் 5 ஆயிரத்து 100 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நாமக்கல், 

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.படிப்புகளில் 2019-20-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) நேற்று நடைபெற்றது.

இத்தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் பாவை என்ஜினீயரிங் கல்லூரி, முத்தாயம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தி நவோதயா அகாடமி, நேஷனல் பப்ளிக் பள்ளி, முத்தாயம்மாள் பாலிடெக்னிக், பி.ஜி.பி. பாலிடெக்னிக், விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தி ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி என 9 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 5,283 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் சுமார் 5,100 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். மீதமுள்ளவர்கள் தேர்வுக்கு வரவில்லை.

கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிக அளவில் விதிக்கப்பட்டு இருந்தன. தீவிர சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கைக்கெடிகாரம், ஷூ அணியவும், செல்போன், கால்குலேட்டர், காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் கொலுசு, கம்மல், செயின் உள்ளிட்ட அணிகலன்களை அணியவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்து வந்திருந்த அணிகலன்களை அவசர, அவசரமாக கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்.

இதேபோல் துப்பட்டா அணியவும் தடை விதிக்கப்பட்டதால், அதை பெற்றோரிடம் கழற்றி கொடுத்து விட்டு மாணவிகள் தேர்வு அறைக்குள் சென்றனர். இதற்கிடையே கூந்தலை வாராமல் (ப்ரீ ஹேர்) வந்த மாணவிகள் ஜடை பின்னிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த ‘கிளிப்பை’ அகற்றிய பின்னரே தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல் நாமக்கல்லில் உள்ள மையம் ஒன்றுக்கு முழுக்கை சட்டையுடன் வந்த மாணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர் தனது தந்தை உதவியுடன் பிளேடால் அரைக்கை சட்டை போல் கத்தரித்து கொண்டு தேர்வு அறைக்குள் சென்றார்.

இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதுவரை மாணவ, மாணவிகளுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் அருகே காத்திருந்தனர். அனைத்து தேர்வு மையங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story