மாவட்டத்தில் வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு ஊர்வலமும் நடைபெற்றது


மாவட்டத்தில் வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு ஊர்வலமும் நடைபெற்றது
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 5 May 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் வணிகர் தினத்தையொட்டி பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. வணிகர்கள் ஊர்வலமும் நடந்தது.

சேலம், 

தமிழ்நாடு முழுவதும் மே 5-ந் தேதி வணிகர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி அன்றைய தினம் வணிகர்கள் மாநாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதால் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு, கடைகளை அடைப்பது வழக்கம்.

அதன்படி, வணிகர்கள் தினமான நேற்று சேலம் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று சென்னையில் மாநாடு நடத்தப்பட்டது. அதையொட்டி அந்த சங்கங்களில் இருப்பவர்கள், மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டி, மளிகைக்கடைகள் மற்றும் இதர வர்த்தக நிறுவனங்களை அடைத்து விட்டு சென்று விட்டனர். இதனால் கடைகள் உள்ள வர்த்தக பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட் பகுதிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கருங்கல்பட்டி, அன்னதானப்பட்டி, சேலம் கடைவீதி, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீரபாண்டி நகர், லீ பஜார் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மேட்டூர் மார்க்கெட் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆத்தூர், சங்ககிரி, இளம்பிள்ளை பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிகர்கள் நேற்று வணிகர் தினத்தையொட்டி ஊர்வலம் நடத்தினார்கள். அப்போது வியாபாரிகள் கெங்கவல்லி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மசூதி தெரு வழியாக சென்று கடைவீதியை சென்றடைந்தது. பின்னர் ஒரு திருமண மண்டபத்தில் வணிகர் சங்க கூட்டம் நடந்தது. இதையொட்டி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கெங்கவல்லி வணிகர் சங்க தலைவர் ஆன்டோ மொரைஸ், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story