திருச்சி மாவட்டத்தில் 18 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 9,880 மாணவ-மாணவிகள் எழுதினர் கடும் சோதனைக்கு பின் அனுமதி
திருச்சியில் 18 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 9 ஆயிரத்து 880 மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்கள் கடும் சோதனைக்கு பின் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்காக 18 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 11 ஆயிரத்து 229 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு நேற்று காலையிலேயே தங்களது பெற்றோருடன் வந்து குவிந்தனர். தேர்வு மையங்கள் முன்பு ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் தங்களது வரிசை எண் உள்ளதா? என்பதை பார்த்து அறிந்து கொண்டனர்.
தேர்வு மையம் முன்பு ஆங்காங்கே அமர்ந்து தேர்வுக்கு புத்தகங்களை வைத்து மாணவ-மாணவிகள் படித்தனர். சிலர் ஸ்மார்ட் போன், கையடக்க கணினி மூலம் அதில் இணையதளம் வாயிலாக படித்ததை காணமுடிந்தது. மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களது அருகில் அமர்ந்தும், நின்று கொண்டும் இருந்தனர்.
தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தன. மேலும் மாணவ-மாணவிகள் அணிகலன்கள் அணிந்து வரக்கூடாது, மாணவிகள் தலையில் ஹேர்பேண்ட், ஹேர்பின் உள்ளிட்டவை மாட்டக்கூடாது, மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, வெளிர் நிறத்திலான ஆடைகள் அணிந்து வர வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்வு எழுத வந்திருந்தனர்.
இருப்பினும் சங்கிலி, மூக்குத்தி, காதணி, வளையல்கள் அணிந்து வந்த மாணவிகள் அதனை தங்களது பெற்றோரிடம் கழற்றி கொடுத்து விட்டனர். மேலும் தலையில் மாட்டியிருந்த பெரிய அளவிலான ஹேர்பேண்ட்டையும் அகற்றினர். பெற்றோர் சிலர் மாணவிகளின் தலையில் மாட்டியிருந்த ரப்பர் பேண்ட்டை கழற்றி தலை முடியை வாரி சிறிய அளவிலான ஹேர்பேண்ட்டை அணிந்து விட்டனர்.
தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் நின்ற ஊழியர்களிடம் மாணவ-மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டனர். பகல் 12 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயிலில் போலீசார் மற்றும் மைய ஊழியர்கள் நின்று மாணவ-மாணவிகளை கடும் சோதனை செய்து அனுமதித்தனர்.
ஆடை உள்ளிட்டவைகளை கண்காணித்தும், ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை ஊழியர்கள் சரிபார்த்த பின்னர் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை கொண்டு வராதவர்கள் ஒரு விண்ணப்ப படிவத்தில் அதற்கான காரணத்தை நிரப்பி கையெழுத்திட்டு கொடுத்தனர். நுழைவு வாயிலை கடந்த பின் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்ட பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு பேனா வழங்கப்பட்டன. தேர்வு எழுத மாணவ-மாணவிகள் உள்ளே சென்றதும் அவர்களது பெற்றோர் வெளியில் காத்திருந்தனர்.
திருச்சி காஜாமலை சமது பள்ளி மையத்தின் வளாகத்தில் பெற்றோர்கள் பலர் காத்திருந்தனர். சிலர் அசதியின் காரணமாக சாய்ந்து படுத்து தூங்கினர். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். காலையிலேயே புறப்பட்டு வந்ததால் மதிய உணவினை பலர் கையில் கொண்டு வந்திருந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வு எழுத புறப்பட்டு செல்வதற்கு முன்பே சாப்பிட்டு சென்றனர். சிலர் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மாவட்டத்தில் 18 மையங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 880 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,349 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதிவிட்டு மாணவ-மாணவிகள் வெளியே உற்சாகமாக வந்தனர். தேர்வு எழுதிய விவரத்தை அவர்களது பெற்றோர் கேட்டு தெரிந்துகொண்டனர்.
Related Tags :
Next Story