கல்லாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் வணிகர் நலச்சங்கம் வலியுறுத்தல்


கல்லாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் வணிகர் நலச்சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 May 2019 11:15 PM GMT (Updated: 5 May 2019 5:27 PM GMT)

கல்லாற்றின் குறுக்கே ரூ.100 கோடியில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வணிகர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தினவிழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு தனியார் திருமண மகாலில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் சத்யா நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் முகமதுரபீக் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் தீர்மானங்கள் வாசித்தார். இதில் தனலட்சுமிசீனிவாசன் குழுமத்தின் நிறுவன தலைவர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ், சங்கத்தின் கவுரவத்தலைவர் அஸ்வின்ஸ் கே.ஆர்.வி.கணேசன், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரசிராஜசேகரன், இமயவரம்பன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். மாநாட்டில் சென்னையில் இருந்தும், நாகர்கோவில், மதுரை பகுதிகளில் இருந்தும் பெரம்பலூர் வழியாக இருதிசைகளிலும், அடிக்கடி இயக்கப்படும் தொலைதூர அரசு பஸ்கள் நின்றுசெல்லும் வகையில் துறைமங்கலம் நான்கு சாலை அருகே கூடுதல் பஸ்நிலையம் அமைக்கவேண்டும். வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி அருகே பச்சைமலையில் சின்னமுட்டுலு பகுதியில் கல்லாற்றின் குறுக்கே ரூ.100 கோடி செலவில் அணைக்கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவேண்டும்.

பச்சைமலையில் லாடபுரம் அருகே அமைந்துள்ள ஆனைக்கட்டி அருவி நீரை தடுத்து 14 ஏரிகள் மற்றும் குளங்களில் எளிதில் நீர்நிரம்பும் வகையில் புதிய நீர்த்தேக்கமும், போர்க்கால அடிப்படையில் கட்டித்தரவேண்டும். பெரம்பலூர் நகரில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரம்பலூர் நகரில் பொதுமக்கள் வாரத்திற்கு ரூ.1,000 செலவு செய்து குடிநீரை விலைக்கும் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பெரம்பலூர் நகருக்கு மட்டும் பிரத்யேகமாக திருமழப்பாடியில் இருந்து காவிரி குடிநீர் வழங்கும் ரூ.85 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும்.

பெரம்பலூர் நகரிலும், மாவட்டம் முழுவதும் கடைகளிலும், வீடுகளிலும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க குற்றப்பிரிவு காவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெரம்பலூரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்கவேண்டும். கொள்ளிடத்தில் இருந்து துறையூர், பெரம்பலூர் வழியாக கொள்ளிடக்கால்வாய் வெட்டும் திட்டம் குறித்து ஆய்வுமேற்கொண்டு, திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரியலூர்-நாமக்கல் இடையே பெரம்பலூர், துறையூர் வழியாக புதிதாக ரெயில் பாதை அமைத்து, ரெயில்கள் விடுவதற்கு மத்திய ரெயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கென பத்திரப்பதிவு மாவட்ட அலுவலகத்தை புதிதாக உருவாக்கவேண்டும். தமிழக அரசு வணிகர் நல வாரியத்தை செயல்படுத்தவேண்டும். 60 வயது கடந்த வணிகர்களுக்கு அரசு ஓய்வூதியமும், அரசு பஸ்சில் சலுகையும் வழங்கவேண்டும்.

பெரம்பலூர், காமராஜர் பஸ் நிலைய பகுதியில் சைக்கிள் நிறுத்தம் நிறுவிடவும். இரு பஸ் நிலையங்களிலும் பயணிகள் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி 3 மாதத்திற்கு ஒருமுறை வணிகர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை தமிழக அரசு நடத்திட உத்திரவிடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நளபாகம் முத்துவீரன், தம்பு பாலாஜி, குறிஞ்சி சிவா, மாநாடுக்குழு பொறுப்பாளர்கள் உள்பட வணிகர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Next Story