மீன்பிடி தடைகாலம் எதிரொலி, நாகையில் மத்தி மீன்களின் விலை கிடுகிடு உயர்வு


மீன்பிடி தடைகாலம் எதிரொலி, நாகையில் மத்தி மீன்களின் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-05T23:19:20+05:30)

மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக நாகையில் மத்தி மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நாகப்பட்டினம்,

மீன்பிடி தடைகாலம் கடந்த 15-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மீன்பிடி தடைகாலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல கூடாது என மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கரை பகுதிக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சிறிய வகை படகுகளான பைபர் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று தொழில் செய்து வருகின்றனர்.

பானி புயல் காரணமாக பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், கும்பகோணம் பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள் நாகை அண்ணா சிலை அருகே உள்ள பாரதி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதுதவிர கேரளாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக நாகைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெளியூர் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பானி புயல் காரணமாக 6 நாட்களாக தொழிலுக்கு செல்லாத பைபர் படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கடந்த 2-ந் தேதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் ஆழ்க்கடலுக்கு செல்லாமல் சுமார் 5 நாட்டிக்கல் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர்.

கரை திரும்பிய பைபர் படகு மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மத்தி மீன்கள் சிக்கியது. மேலும் குத்துவா, ஓட்டம்பாறை, பண்ணா போன்ற கலப்பு மீன்களும், சிறிய வகையான நண்டுகளும் கிடைக்கின்றன.

மீன்பிடி தடைகாலம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தற்போது பைபர் படகு மீனவர்களின் வலைகளில் சிக்கும் மத்தி மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையான மத்தி மீன், மீன்பிடி தடைகாலத்தினால் தற்போது ரூ.150 முதல் 180 வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்தாலும் வேறு வழியின்றி மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 

Next Story