நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தலைவராக வாங்கிலி மீண்டும் தேர்வு
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக வாங்கிலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2019-2022-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதில் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் இணை செயலாளர் என 4 பதவிகளுக்கு 8 பேரும், 50 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 80 பேரும் என மொத்தம் 54 பதவிகளுக்கு 88 பேர் போட்டியிட்டனர். ஒவ்வொரு உறுப்பினரும் 54 வாக்குகள் போட வேண்டும் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
இதில் தற்போதைய தலைவர் வாங்கிலி தலைமையில் ஒரு அணியினரும், முன்னாள் தலைவர் நல்லதம்பி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று சங்க வளாகத்தில் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. இதில் மொத்தம் உள்ள 4,792 உறுப்பினர்களில் 3,811 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 6 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்பட்டன.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தற்போதைய தலைவர் வாங்கிலி 2,302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சேகர் 1,288 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இதேபோல் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணி என்கிற சுப்புரத்தினம், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சீரங்கன், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மயில் ஆனந்த் என்கிற ஆனந்தன் ஆகியோரும் தங்களை எதிர்த்து போட்டியிட்டவர்களை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இவர்களுக்கு அவர்களின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடினர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதாக தேர்தல் குழு தலைவர் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கலின் போது சங்கத்தின் தற்போதைய செயலாளராக இருந்த அருள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவி போட்டியின்றி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று காலையில் வாக்குப்பதிவின் போது தேர்தல் குழுவில் இடம் பெற்று இருந்த தாமோதரன் என்பவர் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மற்றொரு தரப்பினர் குற்றம்சாட்டி அவரை உடனடியாக தேர்தல் பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் குழு தலைவர் பொன்னம்பலம் அவரை தேர்தல் பணியில் இருந்து விடுவித்தார். இதை தொடர்ந்து அவரை போலீசார் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story