திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேங்காய் நாரால் ஆன தரை விரிப்புகள் அமைக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேங்காய் நாரால் ஆன தரை விரிப்புகள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப தொடர்ந்து வழக்கத்தை விட திருவண்ணாமலையில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நேற்று ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் சாமி மற்றும் அம்மன் சன்னதி முன்பு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நடந்து வரும் வழியில் சிவப்பு நிற பிளாஸ்டிக் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு உள்ளன. இந்த தரை விரிப்புகள் பகல் நேரங்களில் வெயிலின் வெப்பத்தினால் சூடாகி அதில் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் அதிகாரிகள் ஆய்விற்காக வந்தனர். அப்போது தரை விரிப்புகள் மீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டது. ஆனால் தற்போது பக்தர்களுக்கு இந்த வசதி செய்து தரப்படவில்லை. தேங்காய் நார் மூலம் செய்யப்பட்ட தரை விரிப்புகள் தான் இந்த வெயிலை தாங்கும் என்றும், இந்த பிளாஸ்டிக் தரை விரிப்புகள் தாங்காது என்றும் பக்தர்கள் கூறினர்.
மேலும் கோவிலில் பக்தர்கள் நடந்து வரும் வழியில் கூலிங் பெயிண்ட் என்று வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது. அது தற்போது வெள்ளை நிறம் மாறி பெயிண்ட் அடித்ததற்கான அடையாளம் இல்லாத வகையில் காணப்படுகிறது.
எனவே, பக்தர்களின் வசதிக்காக தேங்காய் நாரால் செய்யப்பட்ட தரை விரிப்புகள் மற்றும் கூலிங் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story