தூசி அருகே தொழிலாளியை கடத்திய 4 பேர் கைது கார் பறிமுதல்


தூசி அருகே தொழிலாளியை கடத்திய 4 பேர் கைது கார் பறிமுதல்
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-06T00:46:11+05:30)

தூசி அருகே தொழிலாளியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தூசி, 

தூசி அருகே உள்ள குண்ணவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55), அழிஞ்சல்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் ரப்பர் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் பெருமாள் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கார் திடீரென பெருமாளின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து நின்றது. பின்னர் காரில் வந்தவர்கள் பெருமாளை கடத்தி சென்றனர். மேலும் கடத்தல்காரர்கள் பெருமாளின் மனைவி வாசுகியை செல்போனில் தொடர்பு கொண்டு பெருமாளை கடத்தி விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி செல்போனுக்கு வந்த எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில் போலீசார் எப்படியும் பிடித்து விடுவார்கள் என நினைத்து கடத்தல்காரர்கள் காஞ்சீபுரத்தில் பெருமாளை விட்டு விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

பின்னர் பெருமாளிடம் தூசி போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அவர், கடந்த மாதம் தேர்தலின் போது சாலையோரம் அவர்கள் வீசிய பணத்தை நான் தான் எடுத்தேன் என்று பணத்தை கேட்டு அடித்தனர். நான் எடுக்கவில்லை என்று கூறினேன். போலீசார் என்னை தேடும் தகவல் அறிந்த அவர்கள் என்னை காஞ்சீ புரத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர் என்றார்.

மேலும் கடத்தல்காரர்கள் வாசுகியிடம் பேசிய செல்போன் எண்ணின் சிக்னல் செல்லபெரும்புலிமேடு பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இருந்த கடத்தல்காரர்களை பிடிக்க முயன்றனர். இதில் 4 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

பின்னர் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்த துரை (27), நெமிலி மாமண்டூரை சேர்ந்த சவுந்தர் (23), ஆற்காடு பகுதியை சேர்ந்த அப்சல்பாபு (19), காவேரிப்பாக்கத்தை சேர்ந்த அல்தாப் (27) என்பதும், தப்பி ஓடியவர் அரக்கோணம் தாலுகா சங்கரன்பாடி சத்திரம் பகுதியை சேர்ந்த அலீம் என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய அலீமை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story