மரணத்திலும் இணைபிரியாத தம்பதி, கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்


மரணத்திலும் இணைபிரியாத தம்பதி, கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 5 May 2019 11:00 PM GMT (Updated: 2019-05-06T01:00:54+05:30)

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 74). இவருடைய மனைவி ஜீவா (65). இவர்களுக்கு திருமணம் முடிந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

திருப்பதி, ஜீவா தம்பதியினர் தற்போது பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவர் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். நேற்று காலை அவர் குளிக்க சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று திருப்பதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது கணவரின் உடல் அருகே உட்கார்ந்து அழுது கொண்டிருந்த ஜீவா திடீரென சரிந்து கீழே விழுந்து மயக்கமானார்.

உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருப்பதியின் உடல் அருகிலேயே அவரது மனைவி ஜீவாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கணவன்-மனைவி இருவரும் இறந்த செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் அங்கு வந்து தம்பதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திருப்பதி, ஜீவா தம்பதியினர் இருவருக்கும் இடையே சண்டையோ, முரண்பாடுகளோ இருந்தது இல்லை. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த வயதிலும் வெளியே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். மரணத்திலும் இந்த தம்பதி இணைபிரியாது சென்றுவிட்டனர் என்று கூறினர். 

Next Story