திருமணமான புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்த திருமணமான புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 30). இவருக்கும், இவரது உறவினரான பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமசாமியின் மகள் ரேகா(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் உறவினர்களின் எதிர்ப்பை மீறி பிலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் பன்னீர்செல்வமும், ரேகாவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது பன்னீர்செல்வம் வெளியே சென்றிருந்த நேரத்தில், தனது கணவரிடம் இருந்த தன்னை பிரித்து விடுவார்கள் என்று மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 15 நாட்கள் ஆனதால் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஜோதி விசாரணை நடத்தி வருகிறார்.