ஊர் பிரச்சினையில் தலையிட்டதால் ஆத்திரம், எரியோடு போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


ஊர் பிரச்சினையில் தலையிட்டதால் ஆத்திரம், எரியோடு போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 May 2019 10:45 PM GMT (Updated: 5 May 2019 11:43 PM GMT)

ஊர் பிரச்சினையில் போலீசார் தலையிட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எரியோடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் சவடமுத்து (45). விவசாயிகளான இருவரும் உறவினர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி செல்போனில் சவடமுத்துவை தொடர்புகொள்ள முயன்றுள்ளார். பலமுறை அவருடைய செல்போன் எண்ணை தொடர்புகொண்ட போதும், சவடமுத்து செல்போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக இருவரும் வாக்குவாதம் செய்தனர். அப்போது சவடமுத்து தனுஷ்கோடியை கண்டித்துள்ளார். மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை சவடமுத்து எரியோட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனுஷ்கோடி, அவருடைய சகோதரர்கள் தமிழன், கிருஷ்ணன் ஆகியோர் சவடமுத்துவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஊருக்குள் சென்ற சவடமுத்து, தான் தாக்கப்பட்டது குறித்து உறவினர்கள், கிராமமக்களிடம் தெரிவித்தார். அவர்கள் தனுஷ்கோடி, தமிழன், கிருஷ்ணன் ஆகியோரை கண்டித்துள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த எரியோடு போலீசார் பண்ணைப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்தனர். வழியில், கிரிக்கெட் மட்டையின்றி கம்புகளை வைத்து விளையாடிய வாலிபர்களை போலீசார் கண்டித்துள்ளனர். பின்னர் தகராறில் ஈடுபட்டவர்களையும் எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் ஊர் பிரச்சினையில் போலீசார் தலையிட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எரியோடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஊர் பிரச்சினையில் போலீசார் எப்படி தலையிடலாம்?, கிரிக்கெட் விளையாடிய மாணவர்களை எப்படி போலீசார் கண்டிக்கலாம்? என கேட்டு கோஷமிட்டனர். மேலும் சவடமுத்துவை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அப்போது அவர்களை சமாதானப்படுத்த எரியோடு போலீசார் முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. மேலும் கிராமமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீஸ் நிலையத்தை கிராமமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story