தேயிலை வாரியம் சார்பில், பச்சை தேயிலை பறிக்க விவசாயிகளுக்கு விலையில்லா எந்திரங்கள் - துணைத்தலைவர் தகவல்
தேயிலை வாரியம் சார்பில் பச்சை தேயிலை பறிக்க விவசாயிகளுக்கு விலையில்லா எந்திரங்கள் வழங்கப்படும் என்று துணைத்தலைவர் குமரன் கூறினார். அகில இந்திய தேயிலை வாரிய துணைத்தலைவர் குமரன் நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி,
சமீபத்தில் குன்னூர் உபாசி அரங்கில் தேயிலை விவசாயிகள், விவசாய சங்கத்தினர், தொழிற்சாலை நிர்வாகிகள் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருணாசல பிரதேசத்தில் வனப்பகுதிகளை அழித்து தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தேயிலைத்தூள் உற்பத்திக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலைத்தூளின் தரம் மேம்படாமல் போகுமோ? என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. எனவே விவசாயிகள் தரமான பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க வேண்டும். நல்ல விலைக்கு தேயிலைத்தூள் விற்பனையாகும் வகையில் தரமான தேயிலைத்தூளை தொழிற்சாலைகள் தயாரிக்க வேண்டும்.
தேயிலைத்தூளை கொள்முதல் செய்பவர்கள் உரிய விலைக்கு ஏலம் எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 1000 சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் விலையில்லா பச்சை தேயிலை பறிக்கும் எந்திரங்கள் தேயிலை வாரியம் சார்பில் வழங்கப்பட உள்ளது. அசாமில் தற்போது தேயிலைத்தூள் உற்பத்தி அதிகமாக உள்ளது.
இதனால் அங்கு பச்சை தேயிலைக்கு ரூ.20 குறைந்துள்ளது. இதுபோன்ற நிலை தென்னிந்தியாவில் ஏற்படாமல் இருக்க தேயிலைத்தூளை கொள்முதல் செய்பவர்கள் கிலோவுக்கு ரூ.150-க்கு குறையாமலும், பச்சை தேயிலையை கொள்முதல் செய்பவர்கள் கிலோவுக்கு ரூ.30-க்கு குறையாமலும் வழங்க வேண்டும். மேலும் நீலகிரி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தொகை ரூ.65 கோடியை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story