புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மினி லாரியில் கடத்திய ரூ.2 லட்சம் எரிசாராயம் பறிமுதல் - தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மினி லாரியில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்,
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மினி லாரியில் நூதன முறையில் எரிசாராயம் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவு(மதுவிலக்கு) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று மாலை மத்திய புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருடன் இணைந்து ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மினி லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை போலீசார் வழிமறித்தனர். உடனே அந்த மினி லாரியை நிறுத்தி விட்டு, அதை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த மினி லாரியில் சிமெண்டு ஷீட்டுகள் இருந்தது. அந்த சிமெண்டு ஷீட்டுகளை போலீசார் எடுத்து பார்த்த போது, அதற்குள் சிறிய அறை போல் இருந்தது. அதற்குள் 30 வெள்ளை நிற கேன்களில் எரிசாராயம் இருந்தது தெரிய வந்தது. தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த கேன்களில் மொத்தம் 1,050 லிட்டர் எரிசாராயம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு அந்த எரிசாராயத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மினி லாரியையும், எரிசாராயத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த மினி லாரியின் ஆவணங்களை கைப்பற்றி, விசாரித்ததில் திருச்சியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிந்தது. ஆகவே எரிசாராயத்தை திருச்சிக்கு கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story