ஓட்டப்பிடாரம் தொகுதியில், இதுவரை ரூ.68 லட்சம் பறிமுதல்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் இதுவரை ரூ.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ், வெளி மாவட்ட போலீசார் என மொத்தம் சுமார் 1000 பேர் குவிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும் படையிலும் துணை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
நேற்று கோடாங்கிபட்டி சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.5 லட்சம் வைத்து இருந்தார். உடனடியாக அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுவரை ஓட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் ரூ.67 லட்சத்து 96 ஆயிரத்து 80 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதே போன்று அந்த பகுதியை சேர்ந்த போலீசாரும் பணியமர்த்தப்படுவது இல்லை. ஆகையால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் குறைந்த அளவே தபால் ஓட்டுக்கள் அச்சிடப்பட உள்ளன. இதற்கான இளஞ்சிவப்பு நிற காகிதம் சென்னையில் இருந்து வந்த உடன் தபால் ஓட்டுக்கள் அச்சடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story