திரு.வி.க.நகர் மண்டல அலுவலகம் முன் தேர்தல் பணியாளர்கள் சாலை மறியல்


திரு.வி.க.நகர் மண்டல அலுவலகம் முன் தேர்தல் பணியாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 10:15 PM IST)
t-max-icont-min-icon

திரு.வி.க.நகர் மண்டல அலுவலம் முன் தேர்தல் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் 6-வது மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர், பெரம்பூர், பெரவள்ளூர், திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ஓட்டேரி ஆகிய பகுதிகளில் தேர்தல் பணி செய்ய அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வுபெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் சுமார் 450 பேர் மண்டல அதிகாரிகளால் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அவ்வப்போது முகாம் அமைத்து தேர்தல் பணி குறித்த வேலைகளை செய்து வந்தனர்.

இந்த தேர்தல் பணியாளர்களுக்கு வருடத்துக்கு ரூ.7,150 ஊக்கத்தொகை கொடுப்பதாக நிர்ணயிக்கப்பட்டது. அவர்களை கண்காணிக்க 20 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அதன்படி தேர்தல் முடிந்த நிலையில் தங்களுக்கு வரவேண்டிய ஊக்கத்தொகையை முறையாக தராமல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிலர் தங்களிடம் பணம் கொடுத்ததாக கூறி கையெழுத்து பெற்று ரூ.3 ஆயிரம் வரை முறைகேடு செய்து உள்ளதாக திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

ஆனால் அதன்மீது மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான தேர்தல் பணியாளர்கள் நேற்று காலை திரு.வி.க.நகர். மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

ஆனால் மதியம் வரை காத்திருந்தும் தங்களை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி திடீரென அவர்கள், மண்டல அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் திருப்தி இல்லாததால் சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று போராடப்போவதாக கூறிவிட்டு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story