சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக மாறிய அவலம் தண்ணீருக்காக ஏங்கும் கோவில் தெப்பக்குளங்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?


சிறுவர்களின் விளையாட்டு மைதானமாக மாறிய அவலம் தண்ணீருக்காக ஏங்கும் கோவில் தெப்பக்குளங்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
x
தினத்தந்தி 6 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-06T22:23:02+05:30)

தமிழகத்தின் பெரும்பாலான கோவில்களில் உள்ள தெப்பங்குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதுபற்றி அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தெப்பக்குளங் கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தெப்பக்குளங்கள் கோவில் விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கும். பெரும்பாலான கோவில்களில் உள்ள பழமையான தெப்பக்குளங்களில் கல்மண்டபங்கள், சிற்பங் கள், குளத்தின் நடுவே கலை நுணுக்கத்துடன் கூடிய மண்டபங்களும் காணப்படுகிறது.

மதுரையின் அடையாளமான வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் தென்னிந்தியக் கோவில் தெப்பக்குளங்களிலேயே மிகப்பெரியதாகும். இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

முழு கொள்ளளவு நீர் நிரம்பிய தெப்பக்குளத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும். தெப்பக்குளங்கள் கோவிலின் பயன்பாட்டுக்கு மட்டும் உதவி புரியவில்லை.

அதில் தண்ணீர் நிரம்பி இருக்கும் பட்சத்தில் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படும். இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

இப்படி நீர்மட்டம் உயர பங்கு வகிக்கும் தெப்பக்குளங்கள் இன்று தண்ணீருக்காக ஏங்கி தவித்து வருவது தான் வேதனையின் உச்சம். அற நிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோவில் தெப்பங்குளங்கள் நீர் இன்றி வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கின்றன.

தண்ணீரை சேமித்து பயனளித்து வந்த ஏராளமான தெப்பங்குளங்கள், இன்று சிறுவர்களின் விளையாட்டு மைதானங்களாக மாறி விட்டன. நீர் வற்றி போய் விட்டதால் பல கோவில்களில் தெப்ப திருவிழா சிறப்புடன் நடப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

கோவில் தெப்பக்குளங்களுக்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை உடனடியாக முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து கோவில் நிர்வாகத்தினருக்கும் இந்து அறநிலையத்துறை கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தாக கூறப்படுகிறது.

சென்னை மாநகரில் 17 பெரிய தெப்பக்குளங்கள் உள்ள கோவில்களுக்கும், 38 சிறிய அளவிலான தெப்பக்குளங்கள் அமைய பெற்றுள்ள கோவில்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

இந்த உத்தரவை ஒரு சில கோவில் நிர்வாகிகள் கடை பிடித்தாலும், பெரும்பாலான கோவில் நிர்வாகத்தினர் காற்றில் பறக்கவிட்டதாக தெரிகிறது. பல்வேறு கோவில்களில் தெப்பக்குளங்களுக்கான வரத்து கால்வாய்கள் முறையாக சரி செய்யப்படவில்லை.

இதன் காரணமாகவே தெப்பக்குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டுபோய் போய் கிடக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் உள்ளது. ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் ஒரு பகுதி வறண்டு போய் கிடக்கிறது. புறநகரின் பல்வேறு கோவில்களிலும் இதே நிலைமைதான்.

வரும் ஆண்டுகளில் இதே நிலை நீடிக்க கூடாது என்பதால் தெப்பக்குளங்களுக்கான வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று கோவில்களுக்கு மீண்டும் அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட உள்ளதாக அந்த துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மயிலாப்பூரை சேர்ந்த கே.மீனா கிஷோர் கூறியதாவது:-

மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்துக்கான வரத்து கால்வாய்கள் மற்றும் தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் வழிகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைபட்டு உள்ளது. இதனால் தண்ணீர் வரத்தும், வெளியேற்றமும் முறையாக நடக்காததால் தெப்பக்குளத்தின் ஒரு பகுதி வறண்டு கிடக்கிறது.

இந்த தெப்பகுளத்தில் நீர் இருப்பு குறைந்ததால் இப்பகுதியில் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தான் இந்த நிலை. தனியார் நிர்வகித்து வரும் கோவில்களில் முறையாக பராமரிக்கப்படுவதால் தெப்பக்குளங்களில் தண்ணீர் இருந்து வருகிறது.

எனவே கோவில்களில் உள்ள தெப்பக்குளங்களை முறையாக சீரமைத்து நீர் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதிகாரிகள் கவனிப்பார்களா?

Next Story