டிராக்டரில் எடுத்துச்செல்லும்போது காற்றில் பறந்து கண்களில் விழும் குப்பைகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
டிராக்டரில் எடுத்துச்செல்லும்போது குப்பைகள் காற்றில் பறப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கம்,
செங்கத்தில் பேரூராட்சி சார்பில் தினமும் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற பேரூராட்சியில் 2 டிராக்டர்கள், வேன், தள்ளுவண்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் அனைத்து வார்டுகளில் சேரும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பநத்தம் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் மக்கும்குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.
செங்கம் நகரில் சில இடங்களில் மட்டும் மகளிர் குழுக்கள் மூலம் தள்ளுவண்டிகளில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அந்த குப்பைகள் டிராக்டர்களுக்கு மாற்றி குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது.
இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம், துக்காப்பேட்டை மற்றும் இதர பகுதிகளிலிருந்து டிராக்டர்களில் சேகரித்துக் கொண்டு வரப்படும் குப்பைகளை தார்பாய் போட்டு மூடாமல் கொண்டு செல்கின்றனர். அவ்வாறு குப்பைகள் கொண்டு செல்லப்படும்போது அவை காற்றில் பறந்து சாலைகளில் விழுகிறது.
சிறிய அளவிலான குப்பைகள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து விடுகிறது. மேலும் துர்நாற்றமும் வீசுவதோடு சில நேரங்களில் குப்பைகளில் உள்ள சாக்கடை கலந்த தண்ணீர் ரோட்டையும் அசுத்தப்படுத்தி செல்கிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம், வாகனங்களில் சேகரித்து எடுத்து செல்லப்படும் குப்பைகள் மீது தார்ப்பாயை போட்டு மூடி அவற்றை காற்றில் பறக்காதவாறு எடுத்துச்செல்ல வேண்டும் என்றும், கழிவுநீருடன் சேர்ந்த குப்பைகள் உலர்ந்தபின் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story