வெங்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
வெங்கல் அருகே குடிநீர் கேட்டு 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே வெள்ளியூர் ஊராட்சியில் புதிய காலனி, பழைய காலனி உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊராட்சியில் உள்ள 3 ஆழ்துளை கிணறுகள் பழுதாகிவிட்டதால் புதிய காலனி, பழைய காலனியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.
இதனால் கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து உபயோகப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைதொடர்ந்து, கிராம மக்கள், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
தகவலறிந்த வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். திருவள்ளூர் தாசில்தார் சீனிவாசன், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்து தருவதாக உறுதி கூறினர்.
இதனைதொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story